சென்னை வந்து சேர்ந்தது சீன அதிபரின் கார்

சென்னை வந்து சேர்ந்தது சீன அதிபரின் கார்

2 mins read

சென்னை: இம்மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை ஒருபக்கம் தமிழக அரசு செய்து வரும் நிலையில், சீனாவில் இருந்து அதிபர் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமான கார் ஒன்று இந்தியாவிற்கு வந்துள்ளது.

இந்தக் கார் நேற்று சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. சீன அதிபருக்காகவே சீனாவின் ஃப்ஹா நிறுவனம் தயாரித்துள்ள இந்த கார் அவருக்கு மட்டுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த காரில் தான் அதிபர் சீனாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் சீன அதிபரின் உயிருக்கு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் எந்த ரக துப்பாக்கி குண்டுகளாலும் துளைக்கவே முடியாத கண்ணாடிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதைத் தவிர, ராக்கெட் லாஞ்சர் கொண்டு இந்தக் காரைத் தாக்கினாலும் இந்தக் கார் கொஞ்சம்கூட அசராது அப்படியே எந்திரன் 'சிட்டி' ரஜினி மாதிரி அதே இடத்தில் நிற்கும்.

ஆறு தானியங்கி கியர் வசதிகளைக் கொண்ட இதில் 110 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்ப முடியும். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய இந்தக் கார் 3,150 கிலோ எடை கொண்டது.

இவற்றுடன் பாதுகாப்பு காரணங்கள் கருதி, வெளியே அறிவிக்கப்படாத பல கூடுதல் வசதிகளும் இந்தக் காரில் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தனை வசதிகளையும் கொண்டுள்ள இந்தக் காரின் விலை இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய். தங்க இருக்கும் சோழா ஓட்டலில் இருந்து மகாபலிபுரத்துக்கு 49 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய இருக்கும் சீன அதிபர், வழிநெடுகிலும் வரவேற்பை பார்த்தபடியே மெதுவாக காரில் செல்ல உள்ளார்.