'தமிழர்களுக்கு வேலை கொடுத்தால் நல்லது'

'தமிழர்களுக்கு வேலை கொடுத்தால் நல்லது'

2 mins read

சென்னை: தமிழ் மொழியைப் பேசும் உள்ளூர் மக்களுக்கு சுங்கச் சாவடிகளில் வேலை கொடுக்கவேண்டும். இதன்மூலம் மொழி புரியாமல் தடுமாறும் சூழல் தவிர்க்கப்படும் என்று திமுக எம்.பி. வில்சன் தனது டுவிட்டர் பக்கம் வழி மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் நான்கு வழிச் சாலைகளில் 400க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதாவது, நான்கு வழிச்சாலை அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து சேவைக் கட்டணம் என்ற பெயரில் சுங்கச் சாவடிகள் வசூலில் ஈடுபடுகின்றன.

இந்த வசூலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விதிமுறைகளை மீறி வசூல் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம், அடிதடி வரை அவ்வப்போது நடந்து வருகிறது.

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத னால் உள்ளூர் மக்கள் பேசுவதும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பேசுவதும் ஒருவருக்கு ஒருவர் புரியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

"தமிழகத்தின் சுங்கச் சாவடிகளில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரியாத நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களால் தமிழர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சுங்கச் சாவடிகளில் தமிழ் பேசும் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.