சென்னை: சீன அதிபர் ஸி ஜின்பிங் காலை உணவாக தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, பூரி சாப்பிட உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, வர்த்தகப் பிணைப்பு, பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகின்றனர்.
இந்தத் தலைவர்களின் மாபெரும் சந்திப்பு இரு நாட்களுக்கு நீடிக்கிறது. இது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதோடு மாநிலத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளது.
சீன அதிபர் இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை வந்ததும் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின்னர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிடுகிறார். அவருக்காக சீன உணவு வகைக ளுடன் தென்னிந்திய உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.
இதில் அவர் விரும்பிச் சாப்பிடும் வெங்காயம், இறைச்சி சேர்த்து தயாரிக்கப்பட்ட சாதம், வறுத்த ஈரல், நூடுல்ஸ், வெஜிடபிள் சாலட், பயறு வகைகள், சூப் வகைகள் இடம்பெறுகின்றன.
இதனுடன் தென்னிந்திய உணவு வகைகளான அரிசி சாதம், சாம்பார், வத்தக் குழப்பு, ரசம், பிரிஞ்சி, பிரியாணி, பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், தக்காளி, கேரட் சூப் உள்ளிட்ட 28 வகையான உணவு வகைகள் இடம்பெறுகிறது.
காலை உணவாக சிக்கன் டிக்கா, சோயா மசாலா, சவ் மின் (மெல்லிய நூடுல்ஸ்), ஷன்காளிணி நூடுல்ஸ் (தடித்த நூடுல்ஸ்), சோப் கோளிணி (பொறித்த கறியுடன் கூடிய கலவை சோறு), தேநீர், குளிர்பானம், கேக், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் இடம்பெறுகின்றன.
இந்த உணவுப் பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பார், சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி உள்ளிட்ட வைகளையும் இடம்பெறச் செய்துள்ளனர்.
தமிழர்களின் உணவு வகைகளை சீன அதிபருக்கு விளக்கி சொல்லி ருசி பார்க்க வைக்கவும் சமையல் கலை வல்லுநர்கள் அங்கு இருப்பார்கள்.

