'ரூ.20 கோடிக்காக நாங்குநேரி காங்கிரசுக்கு கைமாறியது'

'ரூ.20 கோடிக்காக நாங்குநேரி காங்கிரசுக்கு கைமாறியது'

2 mins read

களக்காடு: இடைத்தேர்தல் நடக்கவுள்ள நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்தது தொடர்பில் ரூ.20 கோடி பணம் கைமாறியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியுள்ளார்.

களக்காடு தெற்கு காடுவெட்டி கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறு கையில், "நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்ததற்காக ரூ.20 கோடி பணம் கைமாறியுள்ளது.

"தங்களுக்கு ரூ. 2,000 கோடி சொத்துகள் உள்ளதாகவும் இதில் ரூ.200 கோடி ரூபாயைத் தேர்தலில் செலவழிக்கப் போவதாகவும் கூறு கின்றனர். முன்பிருந்த தேசிய காங்கிரஸ் கட்சி இப்போதைக்கு இல்லை.

"இம்மாதம் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற அதிமுக இலக்கு நிர்ணயித்து உள்ளது.

"அதிமுக வேட்பாளர் சாதாரண தொண்டர் மட்டுமே. அவர் பணத்தை நம்பி நிற்கவில்லை. இந்த தொகுதி வாக்காளர்களை நம்பி தேர்தலில் நிற்கிறார்.

"நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளிமாவட்டத்தில் பிறந்து இந்த மாவட்டத்தில் நிற்கிறார்.

"தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்கே பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா காந்தி, அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"உள்ளூரில் வசிக்கும் வேட்பாளரான எங்களது அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் வெற்றிபெற முடிவு செய்துவிட்டனர்.

"தேர்தலை கண்டு பயப்படுகிற கட்சி அ.தி.மு.க. கிடையாது. "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்," என்று கூறினார்.