திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் கர்நாடக போலிசுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகப்படும் அளவிற்கு திடீர் திருப்பங்கள் இடம்பெற்று இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நகைக்கடையில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிஇருந்த திருவாரூர் முருகன் என்பவர் காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை ரகசியமாகப் பறிமுதல் செய்து, அவற்றை கர்நாடக போலிசார் எடுத்துச் சென்றபோது தமிழ்நாட்டின் பெரம்பலூர் போலிசிடம் வசமாக சிக்கிவிட்டார்கள்.
இதன் மூலம் கர்நாடக போலிசார் சிலருக்கும் சந்தேக நபரான முருகனுக்கும் ரகசிய பேரம் நடந்திருக்கலாம் என்று அனுமானிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி நகைக்கடையில் 22 கிலோ தங்க நகைகள் கொள்ளைஅடிக்கப்பட்ட விவகாரத்தில் குற்ற வாளிகளைப் பிடிக்க திருச்சி போலிசார் ஏழு தனிப்படைகளை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
மணிகண்டன் என்பவர் நாலரை கிலோ நகைகளுடன் சிக்கியதை அடுத்து அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திருவாரூர் முருகன் என்பவருக்கும் அவருடைய தம்பியான சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.
சுரேஷை தாங்கள் நெருங்கிவிட்டதாக தமிழக போலிஸ் தெரிவித்திருந்த நிலையில், அந்த நபர், திடீரென நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டார். அதே வேளையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த முருகன், அங்கிருந்த நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார்.
இந்த நிலையில், கர்நாடகாவின் பொம்மனஹள்ளி போலிசார், முருகனை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்ததை அடுத்து காவிரிப் படுகையில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த விவரங்கள் தெரியவந்தன.
தமிழக போலிசுக்குத் தெரியாமல் அந்த நகைகளை எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பொம்மனஹள்ளி போலிசார் திருச்சி முருகனுடன் சாதாரண உடையில் திருவெறும்பூரை அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப் படுகைக்குச் சென்று அங்கு புதைக்கப்பட்டு இருந்த 12 கிலோ நகைகளைக் கைப்பற்றினர்.
நகைகளுடன் முருகனையும் அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்றபோது வழியில் அவர்கள் பெரம்பலூர் போலிசிடம் சிக்கிவிட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றி கர்நாடக மாநில போலிஸ் தலைவருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நகைகளை முறைப்படி தமிழக போலிசிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக போலிஸ் உறுதி கூறியதை அடுத்து நகைகளுடன் கர்நாடக போலிசாரை பெங்களூரு செல்ல தமிழக போலிஸ் அனுமதித்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து முருகனுக்கும் கர்நாடக போலிஸ் துறையைச் சேர்ந்த சிலருக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
இதேபோல முருகன், ஒவ்வொரு முறையும் தான் கொள்ளையடித்த நகைகளைப் பல்வேறு பகுதி போலிசாருடன் பங்குபோட்டுக்கொண்டு தப்பி வந்திருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
முருகன் கொள்ளையடித்த பணம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி இருக்கலாம் என்றும் அந்தப் பணத்தைச் செலவழித்து முருகன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
முரு-கனை பெங்களுரு போலிஸ் அழைத்துச் சென்றுள்ளது. அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

