பழனிசாமி பதிலடி: திமுக ஆட்சி இனிமேல் ஒருபோதும் இல்லை

பழனிசாமி பதிலடி: திமுக ஆட்சி இனிமேல் ஒருபோதும் இல்லை

2 mins read

விழுப்புரம்: திமுகவின் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், இனிமேல் ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆக முடியாது என்றும் தமிழகத்தில் இனிமேல் திமுக ஆட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த மாநிலத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கணித்து கூறி இருக்கிறார்.

அதிமுக ஆட்சியையும் தனிப்பட்ட முறையில் தன்னையும் குறைகூறி வரும் ஸ்டாலின், திமுகவின் தலைவர் ஆனதே ஒரு விபத்துதான் என்றார் அவர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இம்மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வரானது ஒரு விபத்துதான் என்று நாங்கு நேரி தொகுதியில் பிரசாரம் செய்த ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

அதிமுகவில் காலில் விழுந்து முதல்வர் ஆனவர் இருக்கிறார். ஆனால் சசிகலாவின் காலில் தவழ்ந்து முதல்வர் ஆனவர்தான் பழனிசாமி என்றும் முதல்வர் ஆனதும் அதே சசிகலாவுக்குப் பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என்றும் ஸ்டாலின் காரசாரமாகப் பிரசாரம் செய்தார்.

தானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்று கூறி வரும் பழனிசாமி, பதவியைவிட்டு விலகி நேரடியாகப் போட்டியிட்டுப் பார்க்கட்டும் என்று ஸ்டாலின் சவால் விட்டும் இருந்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, இதற்குப் பதிலளிக்கும் வகையில், கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பெடுத்துக்கொண்டது ஒரு விபத்துதான் என்றார்.

இப்போது திண்ணைக்குத் திண்ணை சென்று பிரசாரம் செய்து வரும் ஸ்டாலின், திமுக ஆட்சியின்போது அப்படிச் செய்யாதது ஏன் என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்கவும் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்களை வளைக்கவும் ஸ்டாலின் மேற்கொண்ட பல முயற்சிகளும் ஏராளமான சதிகளும் வெற்றிபெறவில்லை என்று கூறிய பழனிசாமி, அதிமுக ஆட்சி மக்கள் நலனை மையமாகக் கொண்டு திறம்பட நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

ஸ்டாலின் உழைப்பினால் முன்னேறி திமுக தலைவராக உயரவில்லை என்று குறிப்பிட்ட பழனிசாமி, தந்தை மறைந்ததும் திமுக தலைவராக ஸ்டாலின் ஆகிவிட்டார் என்றும் இதுவும் விபத்துதான் என்றும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என்று சவால் விடுத்த முதல்வர், திமுகவின் எந்த வியூக மும் இனி வெற்றிபெற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.