'20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்'

'20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்'

1 mins read
a1e91695-f045-4eb0-aebf-603f938b5d5e
பெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20  ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மணிகண்டனை(நடுவில்) கண்டுபிடித்த தாய் இந்திரா (இடது). வளர்ப்புத் தந்தை அபிபுல்லா (வலது). -

பெரம்பலூர்: பெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை இப்போது கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், திரு வாளந்துறை கிராமத்தைச் சேர்ந்த வர் இந்திராவின் மகன் மணி கண்டன், 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதில் காணாமல் போனார்.

அன்று முதல் மணிகண்டனின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

தற்போது கட்டட வேலை செய்து வரும் இந்திரா, இரு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், தொழுதூரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அதே இடத்தில் இம்ரான் என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தார்.

தனது கணவனின் தோற்றம் போன்று இருந்த இளைஞரைக் கண்டு ஆச்சரியமடைந்த இந்திரா இதுதொடர்பாக இளைஞரிடம் விசாரித்தபோது, தான் மணிகண்டன் அல்ல, தனது பெயர் இம்ரான் எனவும் ராமநத்தத்தைச் சேர்ந்த அபிபுல்லா என்பவர் தன்னை சிறு வயதிலிருந்து வளர்த்து வருவதாக வும் கூறியுள்ளார். இதையடுத்து ராமநத்தம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அபிபுல்லாவிடம் விசாரணை செய்தார்.

"2004ஆம் ஆண்டு ராமநத்தம் சாலையோரம் சிறுவன் மணிகண்டன் அழுது கொண்டிருந்ததால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் யாரும் தேடி வராததால் தனது நான்கு ஆண் குழந்தைகளுடன் மணிகண்டனையும் சேர்த்து ஐந்தாவது குழந்தையாக நினைத்து வளர்த்ததாகவும் அவருக்கு இம்ரான் என்று பெயர் சூட்டியதாகவும் அபிபுல்லா கூறியிருக்கிறார்.

இதையடுத்து மணிகண்டன் தன்னை வளர்த்தவரை விட்டு பிரிந்துசெல்ல மனமின்றி தாய் இந்திராவோடு அழுதவாறே சென்றார். அபிபுல்லாவும் கண்கலங்கினார்.