தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை மையம்

2 mins read
5273ccc0-bb24-4ecb-a210-1e713d63ce6c
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். -

தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால் உதகை - குந்தா, குன்னூர் - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மண் குவியல்களை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் பெய்த மழையால், ஒரே நாளில் மின்னல் தாக்கி ஐவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூரில் வயலில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நசரத்பேட்டையில் மரம் வெட்டிக்கொண்டிருந்த ஆடவர் இடி தாக்கி உயிரிழந்தார்.

தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, கடையநல்லூர், வடகரை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் மழையின் காரணமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்வதால் அப்பகுதி விவசாயிகள், விவசாய பணிகளைத் தொடங்கிஉள்ளனர். இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே லக்கம்பட்டியில் புதிய தடுப்பணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.