அதிமுகவை மீட்போம் என தினகரன் சூளுரை

அதிமுகவை மீட்போம் என தினகரன் சூளுரை

2 mins read
0a2e7703-798f-40a8-9f0c-c440338dbc14
அதிமுகவை மீட்டே தீருவோம் எனச் சூளுரைத்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். -

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டே தீருவோம் எனச் சூளுரைத்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உடன்பிறவாத் தோழி சசிகலாவும் கட்டிக்காத்த ஆட்சியையும் இயக்கத்தையும் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது சொந்த நலனுக்காக அடகுவைத்துவிட்டனர் என்று தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக தொடங்கப்பட்டு நேற்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட இப்போதைய தமிழக ஆட்சியாளர்கள் துரோகமே வடிவான சூது மதியாளர்கள். ஆட்சியையும் கட்சியையும் தங்களின் சுயலாபத்திற்காக அடகு வைத்து, சிங்கமென நிமிர்ந்து நின்று, எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அம்மா அவர்களின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள்.

"அம்மா அவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக தலைவாசலைத் திறந்துவிட்டு தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்தார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் அம்மாவின் இயக்கத்தையும் அம்மா அவர்கள் போற்றிப் பாதுகாத்த தமிழ்நாட்டின் நலன்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்முடைய கைகளில் வழங்கியது.

"உண்மையான உணர்வும் வழிவழியாக தீய சக்திகளுக்கு எதிரான ரத்தம் உடலில் ஓடுகிற நெஞ்சுரமும் கொண்ட தொண்டர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் வழி நடத்தப்படுகிற இந்த இயக்கத்தை, அற்ப ஆசைகளுக்காகத் தாவியோடுகிற யாரோ சிலரின் துரோகத்தால் எதுவும் செய்துவிட முடியாது.

"ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற பொம்மை அதிகாரம் போன பிறகு துரோகிகளை அண்டி நிற்பதற்கு அவர்களின் நிழல்கூட தயங்கும். அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை," என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தமது அறிக்கையில், 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு' என்ற எம்ஜிஆர் நடித்த படத்தின் பாடல் வரியையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.2019-10-17 06:00:00 +0800