புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் தொடர்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கெனவே அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அடுத்தடுத்த இந்த கைது நடவடிக்கை காரணமாகத் தொடர்ந்து அவர் சிறையிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்ச ராக இருந்தார். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாகப் பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கும் சிதம் பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் தொடர்பில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத் துறையும் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் இன்று அக்டோபர் 17ல் முடிகிறது.
இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக சிதம்பரத்தைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
விசாரணையின்போது, "நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரத்தை 30 நிமிடங்கள் விசாரிக்கலாம். அதன்பிறகு காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்யலாம். திகார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்," என நீதிமன்றம் கூறியது.
இதற்கு "நீதிமன்ற வளாகத்தில் அவரை விசாரிக்கிறோம். இங்கேயே அவரை கைது செய்கிறோம்," என அமலாக்கத் துறை கூறியது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
''அவருடைய கௌரவத்தை யும் பார்க்கவேண்டும். பொது இடத்தில் கைது செய்யக்கூடாது," என நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து திகார் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மூவர், சிதம்பரத்திடம் 2 மணி நேரம் விசாரணையை முடித்த நிலையில், கைது செய்தனர். தொடர்ந்து அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

