சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை விலகி வடகிழக்குப் பருவமழைத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வடகிழக்குப் பருவமழைதான் அதிக மழையைக் கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மாநிலத்தின் பல இடங்களிலும் மழை பெய்தது.
அடுத்த ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்து இருக்கிறது.
சென்னை, புதுச்சேரி பகுதிகளிலும் திருப்பூர் மாவட்டம் போன்ற இடங்களிலும் கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மாலத்தீவு, கேரள கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை நகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் ஏரி, குளம், குட்டைகள் ஏற்கெனவே நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பல அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறின.
நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி இருக்கின்றன.
குறித்த காலத்தில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டதே இதற்கான காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு கடந்த சில ஆண்டுகளைவிட மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

