ஸ்டெர்லைட்: ரஜினிகாந்தை விசாரிக்க சீமான் கோரிக்கை

ஸ்டெர்லைட்: ரஜினிகாந்தை விசாரிக்க சீமான் கோரிக்கை

2 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி ஒரு நபர் ஆணையம் விசாரிக்கிறது.

அந்த ஆணையம் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தையும் விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

அந்த ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் புதன்கிழமை சாட்சியம் அளிக்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். சமூக விரோத சக்திகள் புகுந்து போராட்டத்தைத் திசை திருப்பிவிட்டதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

"ரஜினி எப்படி இப்படி சொல்ல முடியும். அப்படி ஊடுருவியவர்கள் யார்? ஏன் அத்தகைய பேர்வழிகள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை. போலிஸ் குண்டுகளுக்கு இலக்காகி மாண்ட 13 பேரும் பொதுமக்கள் என்பதால் ரஜினிகாந்த் பொத்தாம்பொதுவில் பொதுமக்களைக் குறைகூறக் கூடாது. அவரையும் இந்த ஆணையம் விசாரிக்க வேண்டும்," என்று சீமான் கூறினார்.

இவ்ேவளையில், விக்கிர வாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்கிடமான ஒரு கருத்தை தெரிவித்ததன் தொடர்பில் சீமானை இடைத்தேர்தல் முடிந்ததும் கைதுசெய்யலாம் என்று அதிமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. விக்கிரவாண்டியில் பேசிய சீமான், ராஜீவ்காந்தியைக் கொன்றது தாங்களே என்று பேசியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சீமானை கைதுசெய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சார்பில் போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சீமான் பேச்சுக்குத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்ட சீமான், தான் இதற்கெல்லாம் அஞ்ச வில்லை என்றார்.