லலிதா ஜூவல்லரி கொள்ளை விவகாரம்: முருகன் வாக்குமூலம்: அதிர்ச்சியில் போலிஸ்

லலிதா ஜூவல்லரி கொள்ளை விவகாரம்: முருகன் வாக்குமூலம்: அதிர்ச்சியில் போலிஸ்

2 mins read

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தின் காரணகர்த்தா என்று கூறப்படும் திருவாரூர் முருகன் அளித்து வரும் வாக்குமூலங்கள் போலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருவதாகத் தெரிகிறது.

திருவாரூர் முருகன் மீது தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இப்போது பெங்களூரு போலிசாரின் பிடியில் இருக்கும் முருகன், சில நாட்களுக்கு முன் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டபோது திருச்சி தனிப்படை போலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த 2017ல் முருகனும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னையில் சுமார் 50 வீடுகளில் கொள்ளை அடித்தார்கள். அந்தச் சம்பவங்கள் தொடர்பில் முருகனின் கூட்டாளிகள் ஆறு பேர் பிடிபட்டனர்.

அவர்களை விடுவிப்பதற்காக சென்னை போலிஸ் அதிகாரி ஒருவருக்குத் தான் ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அந்த 10 லட்ச ரூபாய் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் என்றும் முருகன் இப்போது வாக்குமூலம் அளித்துள்ளான்.

10 லட்சத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி மேலும் பணம் கேட்டதால் அவருக்குக் கூடுதலாக ரூ. 20 லட்சம் கொடுத்ததாகவும் திருவாரூர் முருகன் கூறி இருக்கிறான்.

பணம் கொடுத்த சம்பவம் ஒரு ஹோட்டலில் பிரத்தியேகப் படச் சாதனத்தில் பதிவாகி இருப்பதாகவும் முருகன் தெரிவித்துள்ளான்.

சென்னை கொள்ளை வழக்கு ஒன்றில் சிக்காமல் இருப்பதற்காக இரண்டு தலைமை போலிஸ் அதிகாரிகளுக்கு தான் உதவியதாகவும் முருகன் வாக்குமூலம் அளித்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறான்.

இந்த வாக்குமூலங்கள் காரணமாக சென்னையைச் சேர்ந்த சில போலிஸ் அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருவாரூரைச் சேர்ந்த முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.10 லட்சத்தில் தான் ஒரு கார் வாங்கிக் கொடுத்ததாகவும் ஏற்கெனவே முருகன் குறிப்பிட்டு இருக்கிறான்.

முருகன் இப்படி வாக்குமூலம் அளித்து இருப்பது அதிகாரிகளின் பெயரைக் கெடுக்க அவன் செய்யும் சதியாக இருக்கலாம் என்று போலிஸ் தெரிவிக்கிறது.

என்றாலும் உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, இப்போது பெங்களூரு போலிஸ் பிடியில் இருக்கும் முருகனை விரைவில் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவிருப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.