சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் போதிலும் 10 மாவட்டங்களில் டெங்கிக் காய்ச்சல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் 3,400 பேர் டெங்கி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 1,000க்கும் அதிகமானவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. சில மருத்துவமனைகள் நோயாளிகளைத் திருப்பிவிடுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,000 பேருக்கு காய்ச்சல் ஏற்படுவதாகவும் அவற்றில் 350 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் தொற்றி இருப்பது தெரியவருவதாகவும் மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டெங்கி பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளவர்களில் சென்னைக்குச் சிகிச்சைக்குச் செல்வோரே அதிகம் என்று தெரிகிறது.
இதனிடையே, டெங்கியை ஒடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சேலம் மருத்துவமனையில் யோகேஸ்வரி, 28, என்ற மாது டெங்கிக் காரணமாக மாண்டார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் டெங்கிக் கொசு இனப்பெருக்கம் காணப்பட்டதால் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல ஈரோட்டில் சுகாதாரமற்ற சூழலில் செயல்பட்டு வந்த ஓர் உணவகத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருத்தணி ரயில் நிலையத்தில் தீயணைப்பு வாளி தண்ணீரில் டெங்கி கொசு இருந்ததை அடுத்து அந்த ரயில் நிலையத்திற்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருத்தணியில் சுகாதாரமற்று இருந்த டீக்கடைக்கும் இரு வீடு களுக்கும் முறையே ரூ.5,000, ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

