நாகை: நாகை மாவட்டம், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு முதல்வராக பணியாற்றி வரும் துரைராசன் என்பவர், அங்கு பணிபுரியும் துணை பேராசிரியைக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முதல்வர் அடிக்கடி தொல்லை கொடுத்ததாகவும் ஒரு கட்டத்தில் கையெழுத்து வாங்கச் சென்ற அந்தப் பேராசிரியையிடம் தவறாக நடந்து, தனது பாலியல் இச்சைக்கு அடிபணியும்படி அவரை வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில பாதிக்கப்பட்ட பேராசிரியை ஆதாரங்களுடன் போலிசில் புகார் தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட திருக்குவளை போலிசார் பல்கலைக்கழக தலைமையகத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
எனினும் துணைப் பேராசிரியையின் புகார் பொய்யானது என்று கழக முதல்வருக்கு ஆதரவாக ஒரு துறையைச் சேர்ந்த மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகி உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

