நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: 33 பேர் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: 33 பேர் மீது வழக்குப் பதிவு

2 mins read

நாங்குநேரி: இடைத்தேர்தல் நடக்கஉள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

அந்த எம்எல்ஏவைத் தாக்கியதாகக் கூறும் புகாரின் அடிப்படையில் கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் இரண்டு பேரும் போலிசாரிடம் சிக்கி நீதிமன்ற நடவடிக்கைக்கு இலக்காகி இருக்கிறார்கள்.

இம்மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடக்கவிருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.

அதிமுக, திமுகவினர் பல பாணிகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அதி முக அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். திமுகவினர் குடுகுடுப்பைக்காரன் உள்ளிட்ட பல வேடங்களில் வாக்கு வேட்டையாடினர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவிற்கு 73 வயதாகிவிட்டதாகவும் அந்தக் கட்சி வீட்டில்தான் உட்கார வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தர விட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நிற்க தானே போதும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கல்கத்தி என்ற ஊரில் வாக்குக்குப் பணம் கொடுக்க வந்த இரண்டு பேரை பொதுமக்கள் விரட்டி வந்தனர்.

அவர்கள் திமுக எம்எல்ஏ சரவணகுமார் வீட்டுக்குள் புகுந்து வீட்டைப் பூட்டிக்கொண்டுவிட்டனர். கிராமத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த எம்எல்ஏவுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டதாகக் கூறப்படுகிறது.

போலிஸ் விரைந்து எம்எல்ஏவை மீட்டது. அந்த வீட்டிலிருந்து ரூ. 278,000 கைப்பற்றப்பட்டு பறக்கும் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, பத்மநேரி என்ற பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக்கொண்டு இருந்த ஐந்து பேர் பறக்கும் படையினரைப் பார்த்ததும் ரூ.50,000ஐ கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் பற்றி கருத்துரைத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "எல்லாம் எதிர்க்கட்சிகளின் சதிவேலை," என்று கூறினார்.