அடுத்த அதிர்ச்சி: மருத்துவ மாணவர்கள் கூட்டு மோசடி

அடுத்த அதிர்ச்சி: மருத்துவ மாணவர்கள் கூட்டு மோசடி

2 mins read

சென்னை: இந்தியாவில் மருத்துவம் படிக்க அவசியமான நீட் தேர்வில் பூதாகரமாக கிளம்பிய ஆள்மாறாட்ட மோசடி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி கிளம்பிவிட்டது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான தேர்வை 41 மாணவர்கள் கூட்டாகப் பார்த்து எழுதி மோசடி செய்திருப்பது அம்பலமாகி யது. சென்னை பூந்தமல்லி அருகே செயல்படும் மாதா மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார் கிளம்பியதை அடுத்து கடந்த ஆகஸ்ட்டில் அங்கு நடந்த தேர்வைக் காட்டும் காணொளிக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கூட்டாக விடைகளைப் பார்த்து எழுதியதை அந்தக் காணொளிகள் காட்டின.

தேர்வறையில் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அங்கும் இங்கும் சென்றுவந்ததும் புத்தகங்களையும் துண்டுத் தாட்களையும் விடைத் தாட்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டதும் தெரியவந்தது.

சில மாணவர்கள் தேர்வு தொடங்கியபிறகு வெளியே சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்துள்ளனர்.

இதையடுத்து 41 மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

அந்த மாணவர்கள் அதே தேர்வை மீண்டும் எழுதவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மாதா மருத்துவக் கல்லூரிக்கான தேர்வு மைய அங்கீகாரமும் மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அக்கல்லூரியில் மூன்றாண்டு காலத்திற்கு எந்த தேர்வையும் நடத்தமுடியாது.

மாதா மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து, மேல்மருவத்தூரில் செயல்படும் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியும் இதேபோன்ற சிக்கலில் மாட்டி இருக்கிறது.

இந்தக் கல்லூரியில் செயல்படும் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரே மாணவர்கள் பார்த்து எழுத உதவி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்வையும் நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பாக இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.