பருவமழை தீவிரம்: மகிழ்ச்சி, வெள்ளம், நிலச்சரிவு, எச்சரிக்கை

பருவமழை தீவிரம்: மகிழ்ச்சி, வெள்ளம், நிலச்சரிவு, எச்சரிக்கை

2 mins read

கரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடுவதால் கரூர் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி யைக் குலவி சத்தத்தை எழுப்பியும் ஆடிப்பாடியும் மகிழ்ச்சியுடன் தொடங்கி இருக்கிறார்கள்.

அதேவேளையில், நீலகிரி மாவட்டத்தில் பேய் மழை தொடர்வதால் 54 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஏராளமான வீடுகள் இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன. 20க்கும் அதிக கிராமங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மக்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் பல அணைகள் திறக்கப்பட்டதால் சிற்றாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 40 கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல ஈரோடு, திருப்பூர் பகுதி களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் ஓடையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு பகுதிகளில் பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவிட்டதால் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வேளையில், கோவை மாவட்டத்தில் உள்ள பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளும்படி எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்ற சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் மழை அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.