2021க்கு கமல் தயார்: நவம்பர் 7 முதல் பிரசாரம்

2021க்கு கமல் தயார்: நவம்பர் 7 முதல் பிரசாரம்

1 mins read

சென்னை: வரும் 2021ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி முதல் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அவர் சுமார் 4% வாக்குகளைப் பெற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்கு விழுக்காடு குறைவாக இருந்தாலும்கூட சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன.

நான்கு தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் விழுந்தது. மநீம 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது.

இதனால் ஊக்கம் அடைந்துள்ள கமல் அடுத்தகட்டமாக சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் வியூகம் அமைத்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்குக் கிராமப்புறங்களில் அவ்வளவாக ஆதரவு இல்லை.

இதனால் கட்சிக்குச் சரியான நிர்வாகிகளைத் தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப் புறங்களில் கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.