திருச்சி: தமிழ்நாட்டின் நகைக்கடை கொள்ளையன் முருகன் கையாண்டு வந்துள்ள தந்திரங்கள் மேலும் மேலும் அம்பலமாகி வருகின்றன.
திருச்சி லலிதா ஜூவல்லரி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முருகன் கும்பல் கொள்ளையடிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு வாகனத்தை போலிஸ் பறிமுதல் செய்து இருக்கிறது.
TN40 W6780 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த வாகனத்தில் நகைகளை எடைபோடும் இயந்திரம் உள்ளிட்ட பலவும் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளையடித்த பிறகு முருகன் கொள்ளைக் கூட்டத்தினர் சுற்றுலா பயணிகள் போல் நடித்து அந்த வேனில் ஏறி தப்பிச் சென்றுவிடுவது வழக்கம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கொள்ளைக் கூட்டத்தினர் உருக்கி விற்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் இம்மாதம் 2ஆம் தேதி அரங்கேற்றப்பட்ட கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைவன் முருகன் உள்ளிட்ட பலரும் கைதானார்கள். அவர்களுக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடந்த கொள்ளைக்கும் தொடர்பு இருப்பது பின்னர் தெரியவந்தது.
பிடிபட்ட கணேசன் என்பவரை விசாரித்தபோது வங்கியில் கொள்ளையடித்த 479 பவுன் நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றுவிட்டது தெரியவந்ததாக போலிசார் குறிப்பிட்டு உள்ளனர்.
வேன் வாகனம் பற்றிய விவரங்களை கணேசன் கக்கி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த கணேசன் பகலில் வேன் ஓட்டுநராகவும் இரவில் கொள்ளைக்காரனாகவும் மாறிவிடுவார்.
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் மணிகண்டன், சுரேஷ், கணேசன் உள்ளிட்ட பேர்வழிகளிடம் தமிழ்நாடு போலிஸ் விசாரணை நடத்திவருகிறது. முருகன் பெங்களூரு போலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

