400 பேரை ஏமாற்றி ரூ. 100 கோடி பறித்த தம்பதி

400 பேரை ஏமாற்றி ரூ. 100 கோடி பறித்த தம்பதி

2 mins read

400 பேரை ஏமாற்றி 100 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றத்துக்காக சேலத்தைச் சேர்ந்த 33 வயது இந்துமதிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் குற்றச் செயல்களில் அவரது கணவர் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக போலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் ஆர்எம்வி குரூப் ஆஃப் கம்பனிஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் முதலீடு செய்த தொகையைவிட இரு மடங்கு பணம் கிடைக்கும் என்று கணவனும் மனைவியும் தங்களிடம் சிக்கியவர்களிடம் கூறினர்.

அதிலும் நீண்டகால முதலீடு செய்தால் 25 விழுக்காடு வட்டியும் தரப்படும் என்று அவர்கள் கூறினர். அதிக முதலீடு செய்வோர் இலவசமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் விலையுயர்ந்த காரும் தரப்படும் என்றும் இந்து

மதியும் அவரது கணவரும் கதைவிட்டனர்.

இருவரும் வெளியிட்ட விளம்பரங்களைக் கண்டு ஏராளமானோர் பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். முதலீட்டாளர்களை நம்ப வைக்க நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இவ்வாறு மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றி பறித்த பணத்தை தனது மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து படம் எடுத்துக்கொள்வாராம் இந்துமதி.

அந்தப் படங்களைப் பயன்படுத்த தொழிலதிபர்களுக்கும் அவர் வலை விரித்தார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் இந்தத் தம்பதியர் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறை வாயினர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்துமதியும் அவரது கணவரும் முன்பிணை வாங்கிக் கொண்டு யார் கண்களிலும் படாமல் இருந்தனர். இவர்களுக்கு எதிராக தொடர்ந்து புகார்கள் செய்யப்பட்டதால் சேலம் மாவட்ட ஆணையரின் கவனத்தை இது ஈர்த்தது. இந்துமதியையும் அவரது கணவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் இந்த ஜோடி துபாயைச் சுற்றிப் பார்க்க போயிருந்தது தெரியவந்தது. இருவரும் சேலம் திரும்பியதும் கைது செய்யப்பட்டனர்.