கடுமையாகத் திட்டிய நடத்துநர்: பேருந்து கியரைப் பிடித்து நிறுத்திய இளம்பெண்

கடுமையாகத் திட்டிய நடத்துநர்: பேருந்து கியரைப் பிடித்து நிறுத்திய இளம்பெண்

1 mins read

சென்னை: நடந்துநருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இளம்பெண் ஒருவர் கியரைப் பிடித்து இழுத்து சாலையின் நடுவே அரசுப் பேருந்தை நிறுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள நொச்சிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், சனிக்கிழமையன்று தன் நண்பருடன் மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார். இருவருக்கும் பயணச்சீட்டு வாங்க முற்பட்ட போதுதான், உரிய தொகை இல்லை என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.

அவரது நண்பரிடமும் பணம் இல்லை என்பதை அறிந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் ஏசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓடும் பேருந்திலிருந்து குதித்து இறங்கிய நண்பர், உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு, ஒரு ஆட்டோவில் ஏறி, மீண்டும் பேருந்தைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து பேருந்து ஓட்டுநரிடம் 500 ரூபாயைக் கொடுத்து இரண்டு பயணச்சீட்டுகளை வழங்குமாறு அவர் கேட்க, இதற்கும் தம்மிடம் சில்லறை இல்லை என்று கோபப்பட்ட ஓட்டுநர் இருவரையும் மீண்டும் ஏசியதாகத் தெரிகிறது.

இதனால் கடும் கோபமடைந்த அந்த இளம்பெண், திடீரென பேருந்தின் கியரைப் பிடித்து இழுத்து அதை நிறுத்தினார். கியரை அவர் கெட்டியாக பிடித்துக்கொண்டதால், ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியவில்லை. பரபரப்பான சாலையின் நடுவே நின்ற பேருந்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலிசார் பேருந்தை ஓரமாக நிறுத்தச் செய்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.