சகாயம்: மக்கள் சேவைக்கு தடையாக இருந்தால் பதவியையும் தூக்கியெறிவேன்

2 mins read
530eeafa-8548-4be9-8e78-48e07e249f6e
சகாயம் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தொடர்ந்த சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரின் இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படம்: ஊடகம் -

சென்னையில், 'மக்கள் பாதை' அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்புரை ஆற்றிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், "மக்கள் சேவைக்கு எது தடையாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடுவேன். அது பதவியாக இருந்தாலும் சரி," என்று அதிரடியாகப் பேசியுள்ளார். நடைபெற்றது. சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நல்லகண்ணு உட்பட பலருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தாம் சந்தித்த அவமானங்களை உரையின் போது விளக்கிய சகாயம், "ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, ஊழல் செய்யக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவன் நான். அதனால் பல்வேறு அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனால், பலர் சாதாரண அரசுப் பதவிகளில் இருந்து கொண்டு நேர்மையாக மக்கள் சேவையாற்றி வந்துள்ளார்கள்," என்று விருது வாங்கியவர்களுக்குப் புகழாரம் சூட்டினார் சகாயம்.

"தமிழக அளவில் உள்ள நேர்மையாளர்களின் பட்டியலை எடுத்து வருகிறோம். அவர்களைப் பற்றி மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிப்போம். ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலால் சிக்கித் தவிக்கும் தொன்மை பொருந்திய தமிழ்ச் சமூகம் சீக்கிரம் அதிலிருந்து மீண்டெழும். தமிழ்ச் சமூகத்தை மீட்கப் போவது நாம்தான். மக்களுக்காக சேவையாற்ற எது தடையாக இருந்தாலும் அதைத் தூக்கியெறிவேன். பதவி தடையாக இருந்தால் அதையும் தூக்கியெறிவேன்" என்று கூறியுள்ளார்.

சகாயம் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரின் இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.