சென்னை: தமிழகத்தில் 40,000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.
கடந்த மாதம் 10 பொதுத் துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியது.
ஆனால், இதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் அவை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாயினர்.
காசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பண பரிமாற்றம் அனைத்தும் முடங்கியது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வங்கி அதிகாரிகள் பணிக்குச் சென்றனர். ஆனால் வங்கிகளை அதிகாரிகள் திறந்து வைத்து இருந்தபோதிலும் வங்கியில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை.
ஏடிஎம் சேவையும் ஒரு சில இடங்களில் முடங்கின. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வேலை நிறுத்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம், வங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிகளை இணைத்து கிளைகளை மூடக்கூடாது, வாராக்
கடன் பணத்தை வசூலிக்கவேண்டும், வாராக்கடன் சுமைகளை சாமான்ய மக்கள் மீது சுமத்தக் கூடாது.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரி
வித்தார்.

