சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி, மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாகிர் அகமத் தமான் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அழகுப் பொருள் வியாபாரியான தினேஷை சந்தித்தார்.
அப்போது, தனக்குத் தெரிந்த நபரிடம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான 500, 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக கூடுதலாக இருபது லட்சம் ரூபாய் சேர்த்து ஒரு கோடியாக வாங்கித் தருவதாக தினேஷிடம் அவர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டிற்கு 80 லட்சம் பணத்துடன் சென்றார். அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பெரிய பையை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ஜாகிரிடமும் இதில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஜோதிமணியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிமணி ஏற்கெனவே பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே ஜோதிமணி மீது போலி மருந்து தயாரித்த புகார் உள்ளது. இந்த வழக்குடன் சேர்த்து பண மோசடி வழக்கும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே கருணாநிதியின் மகளான செல்வி, எங்களுக்கும் எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்தச் செயலுக்கும் நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

