ஜீன்ஸ் அணிந்த பெண்களுக்குத் தடை

ஜீன்ஸ் அணிந்த பெண்களுக்குத் தடை

1 mins read

சென்னை: ஓட்டுநர் தேர்வுக்கு வந்த இரண்டு பெண்களுக்கு அனுமதி வழங்க கேகே நகர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் மறுத்துவிட்டார்.

ஜீன்ஸ் பேண்டையும் கையில்லாத சட்டையையும் இரு பெண்களும் அணிந்து வந்ததால் சரியில்லாத உடை அணிந்து வந்திருப்பதாகக் கூறி அவர்களுக்கு தேர்வு எழுத அவர் அனுமதிக்க வில்லை.

"நான் ஜீன்ஸ் பேண்டும், கையில்லாத சட்டையும் அணிந்திருந்தேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனக்கு அவசரமாக ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டது. இதனால் வீட்டுக்குப் போய் சல்வார் கமீஸ் உடையணிந்து திரும்பிவந்தேன்," என்று பவித்ரா என்பவர் தெரிவித்தார்.

பத்து நாட்களுக்கு முன் சுமதி என்ற கல்லூரி மாணவிக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டது.

ஒழுங்காக உடையணிந்து வா என்று அவரிடம் அதிகாரிகள் கூறினர். இதனால் ஒட்டுநர் தேர்வுக்கு உடை கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் வாகன ஆய்வாளர் தம்முடன் சக ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டு தமது கருத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒட்டுநர் உரிமத்தை இழக்க விரும்பாத அந்தப் பெண் வீட்டுக்குச் சென்று வேறு உடை அணிந்து திரும்பினார்.

இதற்கிடையே மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷ், ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது நிரம்பிய, தெளிவான மனமுடையவர்களுக்குத் தகுதியுண்டு என்று கூறியுள்ளார்.