புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் பிராமணர்களுக்கு மட்டும் விற்கப்படும் என விளம்பரம் செய்ததால் கட்டுமான நிறுவனம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள லட்சுமி நகரில் 'ஸ்ரீ சக்தி ரெங்கா அப்பார்ட்மென்ட்' எனும் அடுக்குமாடிக் குடியிருப்பை 'ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் கட்டியிருக்கிறது. அக்குடியிருப்பில் உள்ள வீடுகள் பிராமணர்களுக்கு மட்டுமே விற்கப்படும் என ஓம் சக்தி நிறுவனம் விளம்பரம் செய்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
"இது புதுவகையான தீண்டாமை. பிராமணர்களுக்கு மட்டுமே வீடுகள் என்று சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் வீடுகள் விற்கப்படாது என்பதே இந்த அறிவிப்பின் முதன்மையான நோக்கம்," என்று சாடினார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் வினோத் மணி.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓம் சக்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திரு வினோத் மணி புகார் மனு அளித்திருக்கிறார்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தூய்மைப் பணியில் ஈடுபடுவோர் எந்தச் சமூகத்தினர் என்பதை அந்த நிறுவனம் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"சாதியில்லாச் சமுதாயம் என்பதை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் நிலையில், சாதியத்தை உயர்த்திப் பிடிப்பதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. ஏற்கெனவே சாதி, சமயங்களால் சமுதாயம் பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில் இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு தவறான முன்னுதாரணமாகிவிடும்," என்றும் கூறி, அவர் ஆதங்கப்பட்டார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டை ஓம் சக்தி நிறுவனம் மறுத்துள்ளது.
"சைவ உணவு உண்போருக்கு மட்டும் என்று அறிவிக்கவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், விளம்பரத்தில் 'பிராமணர்களுக்கு மட்டும்' எனத் தவறாக அச்சாகிவிட்டது. உண்மையில், நாங்கள் எந்தச் சாதிக்கும் எந்தச் சமயத்திற்கும் எதிரிகள் இல்லை. எவராக இருந்தாலும் அந்த வீடுகளை விற்கத் தயாராக இருக்கிறோம்," என்று ஓம் சக்தி கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளர் அன்பு விளக்கம் அளித்துள்ளார்.
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பிரத்தியேகமாக அடுக்குமாடி வீடுகளைக் கட்ட எப்படி அனுமதியளிக்கலாம் என விளக்கம் கேட்டு திருச்சி மாநகராட்சி தலைமைப் பொறியாளருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (அடக்குமுறைத் தடுப்பு) சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட ஓம் சக்தி கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

