கோவை: 'மிஸ் இந்தியா', 'மிஸஸ் இந்தியா' என பலதரப்பட்ட போட்டி களிலும் இந்திய அழகிகள் தன்னம்பிக்கையோடு பங்கேற்று பட்டங்களை வென்று வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் 38 வயது சோனாலி பிரதீப் என்ற அழகி.
மொரீசியஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சோனாலி பிரதீப் கலந்துகொண்டு 'திருமதி இந்தியா யுனிவர்ஸ்' அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
மொத்தம் 41 பேர் பங்கேற்ற இப்போட்டியில் அழகிப் பட்டத்தை வென்ற சோனாலி, விமானம் மூலம் கோவையை வந்தடைந்தார். அவருக்கு குடும்பத்தினரும் உறவினர்களும் ஊர் மக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சோனாலி பிரதீப், கடந்த 2015-16ஆம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும் 2017ஆம் ஆண்டு 'திருமதி இந்தியா தமிழ்நாடு' அழகிப் பட்டத்தையும் வென்றுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சோனாலி பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு 'திருமதி இந்தியா யுனிவர்ஸ்' பட்டத்துடன் 'பியூட்டி வித் பர்பஸ்' என்ற பட்டமும் கிடைத்துள்ளது. இந்த பட்டம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
"மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டித் தொடரில், நேர்காணல் சுற்றில் பட்டம் பெற்றபின்னர் பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி முக்கியத்துவம் தொடர்பில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என பதில் அளித்தேன். இதுதான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த பட்டத்தை கோவை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.

