சென்னை: தமிழகம் முழுதும் இதுவரை 3,900 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இக்காய்ச்சல் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "டெங்கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
"பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்தக் காய்ச்சல் பாதிப்பை முழுமையாகத் தடுக்கமுடியும்," என்றார்.
ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 40 குழந்தைகள் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் எழிலரசி கூறுகையில், "காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 500 முதல் 750 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தீவிர காய்ச்சல் உள்ளவர்களை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்," என்றார்.
இதற்கிடைேய திமுக சார்பில் பொதுமக்களுக்கு டெங்கியை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

