சிவகங்கை: தமிழகத்தில் ஒரு முன்னோடி கிராமமாகத் திகழ்ந்து வருகிறது ஆலவிளாம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் பெண் எடுக்கவும் பெண் ெகாடுக்கவும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மக்களிடையே போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ளது ஆலவிளாம்பட்டி என்ற கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலையே பூர்வீகமாகக் கொண்டிருக்கின்றனர்.
இந்த கிராமத்தில் மதுவுக்கும் வரதட்சணைக்கும் பழங்காலத்தில் விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதனால் அந்தக் கிராமம் ஒழுக்கம், நல்ல பண்புகளின் உறைவிடமாகத் திகழ்வதோடு மற்ற ஊர்களுக்கும் முன்னோடி கிராமமாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
மதுவில்லா, வரதட்சணையில்லா அந்தக் கிராமத்தில் பெண் கொடுப்பதற்காக ஆலவிளாம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் போட்டி போடுகின்றனர்.
ராமசுவாமி, பொன்னழகி அம்மாளை இஷ்ட தெய்வங்களாக பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வரும் ஆலவிளாம்பட்டி கிராம மக்கள், மது அருந்தமாட்டோம் என்றும் வரதட்சணை பெற மாட்டோம் எனவும் சத்தியம் செய்து கொடுத்ததாகவும் அந்த சத்தியத்தை பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்தக் கிராமத்தில் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை எந்தக் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதில்லை என்றும் வரதட்சணை கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இளைஞர்கள் யாருக்கும் மதுவாசமே தெரியாது என்பதாலும் வரதட்சணை பிரச்சினை இல்லை என்பதாலும் இந்தக் கிராமத்தில் பெண் கொடுக்கவும் பெண் எடுக்கவும் பெரிய போட்டியே நடக்கிறதாம். ஊர் விதியை மதித்து வெளியூர்க்காரர்களும் மது அருந்தாமலேயே ஆலவிளாம்பட்டி கிராமத்திற்குள் நுழைகின்றனர்.

