பாலில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கலந்திருப்பது ஆய்வின் மூலம் அம்பலம்

பாலில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கலந்திருப்பது ஆய்வின் மூலம் அம்பலம்

1 mins read

சென்னை: நாடு முழுவதும் விற்கப்படும் பாலின் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் பாலில் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், புற்றுநோயை உண்டாக் கும் பொருட்கள் பாலில் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளா, டெல்லி, தமிழகம் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

கடந்த 2018 மே முதல் டிசம்பர் வரை அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 1,103 நகரங்களில் கால்நடை வளர்ப்போர், பால்காரர், விற்பனையாளர், நிறுவனங்களிடம் இருந்து 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அவற்றைப் பரிசோதித்த போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கொழுப்பு உள்ளிட்ட சில பொருட்கள் அதிகமாக இருந்தது தெரியவந்தது.

எனினும், சேகரிக்கப்பட்ட மொத்த மாதிரிகளில் 93 விழுக்காடு பால் நுகர்வுக்கு ஏற்றவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் மீதமுள்ள 7 விழுக்காடு பால் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள், பூச்சிக்கொல்லி ஆகியவை இருப்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 114 நகரங்களில் 551 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இவற்றுள் 266 மாதிரிகளில் பல்வேறு பொருட்கள் அனுமதிக்கக்கூடிய அளவைவிட அதிகம் இருந்ததாகவும் புற்றுநோயை தரும் 'அப்லாடாக்ஸின் எம்1' அளவானது 88 மாதிரிகளில் அதிகமாக இருந்தது என்றும் தமிழக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.