இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வசம்

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வசம்

2 mins read

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்குக் கடந்த 21ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளையும் தற்பொழுது அதிமுக கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் அதிமுகவின் பலம் 124 ஆக அதிகரித்துள்ளது. இவ்விரு தொகுதிகளை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆகக் குறைந்தது.

இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது.

இதில் தொடக்கத்திலிருந்தே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் இருந்து வந்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று இரவு 9.30 மணிவரையில் வெளியிட்டிருந்த தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மொத்தம் இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்களில் 1,88,692 பேர் வாக்களித்தனர்.

முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 60.29 விழுக்காட்டு வாக்குகளாகும்.

இவருக்கு அடுத்த இடத்தில் வந்த திமுக வேட்பாளர் புகழேந்தி, 68,842 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கே. கந்தசாமி 2,921 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பிரிவுக்கு 1,560 பேர் வாக்களித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடினார்.

இதில் ஒரு லட்சத்து 70,680 பேர் வாக்களித்தனர். 66.35% வாக்குகள் பதிவாகின.

அதிமுக வேட்பாளர் நாராயணன் 22 சுற்றுகள் முடிவில் 95,377 வாக்குகள் பெற்று வெற்றியைத் தழுவினார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,932 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவர்கள் இருவரும் உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

இதன் தொடர்பில் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர்

திரு மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

"விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று திரு ஸ்டாலின் கூறினார்.