போராட்டம் தொடரும் என தமிழக மருத்துவர்கள் அறிவிப்பு

போராட்டம் தொடரும் என தமிழக மருத்துவர்கள் அறிவிப்பு

2 mins read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று காலவரையற்ற தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தை நிறுத்தக் கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதால் புறநோயாளிகள், உள்நோயாளிகள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த நோயாளிகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை நிலவியதாகவும் ஊடகத் தகவல்கள் ெதரிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சென்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஒரு சுமுக தீர்வு காணப்படாமல் தோல்வி அடைந்ததால் போராட்டத்தை தொடர்ந்து மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புறநோயாளிகளின் சேவை முற்றிலும் முடங்கியதால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தேர்வு செய்யப்பட்ட சிறிய, பெரிய அறுவை சிகிச்சைகளும் நடைபெறவில்லை. அதனை வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், நரம்பு, கல்லீரல், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளும் மருத்துவர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டன.

இதேபோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 18,000 அரசு மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, உயர் படிப்புக்கு 50% இடஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை வசதி கிடைப்பதால் அதனை நம்பி உயிர் வாழ்கின்றனர்.