சென்னை: சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்த ஆராய்ச்சிகள் கட்சிக்குள் தீவிர மடைந்துள்ளன. கட்சி வைத்திருந்த அபார நம்பிக்கையே அதற்கு எதிராகப் போயுள்ளதாக ஒரு கருத்து வலுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக திமுக அனல் பறக்கும் பிரசாரம் செய்தும் அப்படி எங்குதான் திமுகவுக்கு சறுக்கிவிட்டது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
முதலாவதாக, கூட்டணித் தலை வர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனதும் கட்சித் தலைமை கூட்டணித் தலைவர்களைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் போனதுமே மிகப்பெரிய தவறாகப் பாரக்கப்படுகிறது.
இரண்டாவதாக, வன்னியர் சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியால் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடைந்துள்ளது.
கூட்டணி கட்சியில் மட்டுமின்றி சொந்த கட்சியிலும் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாங்குநேரி தொகுதி யில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், தேர்தல் செலவுக்காக தாம்பரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரிடம் தனது சொத்துகளை அடகு வைத்து பெருந்தொகையை திமுகவினரிடம் கொடுத்துள்ளார். அதில் 30% தான் செலவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மட்டும் நாங்குநேரி தொகுதியில் 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பிரசாரம் செய்தார்.
ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பும் முழுமையான ஆதரவும் கிடைக்காததால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

