ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் மீண்டும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி

2 mins read

கீழடி: தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடி ஆகிய நான்கு இடங்களில் மீண்டும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் இதுவரை 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

"அழகன்குளம், கீழடி, பட்ட றைப்பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

"ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அழகன்குளத்தில் அகழாய்வு செய்ததன் மூலம் தமிழகத்துக்கும் ரோம் நாட்டுக்கும் இடையேயான வாணிபத் தொடர்புகள் கண்டறியப்பட்டன.

"இதேபோல் கீழடியில் ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அங்கு 2,600 ஆண்டுகளுக்கு முன் பழமையான நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

"இந்நிலையில் தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோட்டில் கொடுமணல், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி ஆகிய இடங்களில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

"இதையடுத்து ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, கொடுமணல் ஆகிய பகுதிகளில் ஜனவரியில் ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கெனவே நடப்பாண்டு ஆய்வுகளுக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

"ஆதிச்சநல்லூரில் பறம்பு பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில் பல தாழிகள், இரும்புப் பொருட்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

"இரும்புக் காலத்தை தொடக்கமாக கொண்டுள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளைத் தொடர்வது அவசியம்.

"இதேபோல், கொடுமணல் பகுதிகளில் பல்வேறு காலகட்டத்தில் 6 கட்டஅகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்தன. இந்தப் பகுதிகளில் ஆய்வுகளைத் தொடர்வதால் மேலும் பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கும்," என்று கூறப்பட்டுள்ளது.