தீபாவளி: இனிப்புடன் வெடியும் தித்திக்கிறது

தீபாவளி: இனிப்புடன் வெடியும் தித்திக்கிறது

2 mins read

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டில் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்தன. அவற்றோடு, சாப்பிடும் பட்டாசுகளும் கடைகளில் பலரையும் கவர்ந்து ஈர்த்தன.

பட்டாசுகளைப் போல அலங்கரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் சர்க்கரை குறைவானவை என்றும் உடல் நலனுக்குக் கெடுதல் அல்ல என்றும் விளம்பபரப்படுத்தப்பட்டதால் அவை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்ததாகத் தெரிந்தது.

"அணுகுண்டு போன்ற வடிவத்தில் வெள்ளை சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு பார்ப்பதற்கு அசல் அணுகுண்டு போலவே இருக்கும். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர், நாங்கள் பட்டாசு விற்பனையையும் ஆரம்பித்துவிட்டதாக நினைத்துக்கொண்டனர்," என்று சென்னையில் ஒரு கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

வெள்ளி நிறப் பூச்சு கொண்ட சாக்லேட் மத்தாப்பு வகைகளும் உண்டு. இவை குழந்தைகளை மிகவும் கவர்கின்றன. அணுகுண்டு லட்டு ஒன்று 85 ரூபாய்க்கும் சாக்லேட் மத்தாப்பு ஒன்று 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

தரைச்சக்கரம் போன்ற குக்கீஸ், பிஸ்கட் முதலியவையும் விற்பனைக்கு கிடைத்தன. சில கடைகள், ராக்கெட் வடிவ இனிப்புகளைத் தயாரித்து விற்றன.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்கு வழக்கமான இனிப்புகளை வழங்குவதற்குப் பதிலாக இதுபோன்ற வித்தியாசமான இனிப்புகளை வழங்க ஆர்வமாக இருந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது.

பட்டாசுகளைப்போல கண்ணைக் கவரும் வகையில் இனிப்புகளை அலங்கரித்து வைத்து இருந்ததால் கூட்டம் அலைமோதியதாக வேறு ஒரு கடைக்காரர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இனிப்புகளை வழங்கும்போது வாங்கிச் செல்பவர்களின் உடல் நலன் பாதிக்கக்கூடாது என்பதால் உடல் நலனைத் தாங்கள் கவனத்தில் கொண்டதாக இனிப்பு தயாரிப் பாளர்கள் தெரிவித்தனர்.

பட்டாசு இனிப்புகள் ஒரு புறம் இருக்க, சர்க்கரை அறவே சேர்க்கப்படாத சாக்லேட் மூலம் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும் தீபாவளி சிறப்பாக அமோகமாக விற்பனையாயின என்று சொல்லி கடைக் காரர்கள் பலரும் மகிழ்ந்தனர்.