சென்னை: பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
டெங்கிக் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பில் அனுப்பப்பட்ட அச்சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் கசாயம் கொடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
அத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டடங்களையோ கட்டுமானங்களையோ தாமதமின்றி அகற்றவேண்டும் என்றும் பள்ளிகள் வழக்கமாகச் சுத்தம் செய்யப்படும் விவரங்கள் அடங்கிய அறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். என்றும் கூறப்பட்டது.
பள்ளி மாணவர்கள் ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிப்படைந்தால் அருகே உள்ள மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்ற அறிவுறுத்தலும் அடங்கியது.
இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்குள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு மேலும் பல அறிவுறுத்தல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

