திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த 610அடி ஆழ் துளையில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டதை அடுத்து அந்தச் சிறுவனை மீட்க நேற்று மாலை வரை 20 மணி நேரமாகியும் பெரும் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்தது.
மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உதவிகளோடும் இரவு, பகல் பாராமல் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்த மீட்புப் பணியில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தமிழக அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று அதிகாலை 5.30 மணி வரை அந்தச் சிறுவனின் குரலைக் கேட்க முடிந்தது என்றும் பிறகு குரல் காதில் விழவில்லை என்றும் பிற்பகலில் தெரிவித்தார்.
சிறுவன் ஆழ் துளை கிணற்றில் விழுந்ததும் முதலில் அக்கம் பக்கத்தினரும் பிறகு தீயணைப்புத் துறை, காவல்துறை, அரசு மருத்துவத் துறை ஆகியோரும் அவனை மீட்க உடனடியாக முயன்றனர்.
கிணற்றில் ஆக்சிஜன், சக்திமிக்க புகைப்படச் சாதனம் எல்லாம் செலுத்தப்பட்டு சிறுவனின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது 26 அடி ஆழத்தில் சிறுவன் சுர்ஜித் கைகளை மேலே குவித்தபடி இருந்தது தெரிந்தது.
அதேவேளையில், திருச்சி உட்பட நான்கு மாவட்டங்களில் இருந்து மீட்புக் குழுவினர் விரைந்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகளும் அங்கு திரண்டனர். அதிமுக அமைச்சர்களும் விரைந்தனர்.
இரவு நேரமாகிவிட்டதால் விளக்கு ஒளியுடன் மீட்புப் பணி தொடர்ந்தது. மனநல மருத்துவர்கள் சிறுவனின் தாயார் மூலம் அவனிடம் பேச்சு கொடுத்தனர். பதில் கேட்டதை அறிந்து ஊக்கம் பெற்ற மீட்புப் படையினர் உற்சாகம் அடைந்தனர்.
பிறகு மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், நாமக்கல்லைச் சேர்ந்த டேனியல் உள்ளிட்ட வல்லுநர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் வெற்றி கிட்டாததை அடுத்து ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. அப்போது ஏற்பட்ட அதிர்வால் சிறுவன் சுர்ஜித் திடீரென 32 அடி ஆழத்தில் இறங்கிவிட்டான். அதே நேரத்தில், அந்தக் குழிக்குள் மண்சரிவு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிறுவன் 70 அடி ஆழத்திற்குச் சென்று சிக்கிவிட்டான். சிறுவனின் தலையை மண் மூடியிருந்தது.
இதேநேரத்தில், நெய்வேலியில் இருந்து நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவினரும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சென்னையில் இருந்து மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் சேர்ந்தனர்.
மீட்புப் பணி நேற்று பிற்பகல் நிலவரப்படி 20 மணி நேரத்தைக் கடந்தது. இடைவிடாமல், மழையையும் பொருட்படுத்தாமல் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, குழந்தையைப் பிரிந்து தவியாய்த் தவிக்கும் சுர்ஜித்தின் தாயாரான கலாமேரி ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார். தந்தையான பிரிட்டோ ஆரோக்கிய ராஜ் உணவு உறக்கமின்றி வாடி உள்ளார்.
திடீரென பேரிடர் மீட்புக் குழுவினர் ஒரு துணிப்பை வேண்டும் என்று கேட்டதை அடுத்து சுதாரித்துக்கொண்ட கலாமேரி, தன்னுடைய மனவலியையும் பொருட்படுத்தாமல் அந்தப் பையை தானே தைத்துக் கொடுத்தார். கலாமேரி பை தைத்த படம் இணையத்தில் பெரும் பரபரப்பையும் கவலையையும் கிளப்பி கண்ணீரை வரவழைத்தது. சுர்ஜித் உயிர் பிழைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் தொழுகைகளும் நடந்தன. மாநிலம் எங்கும் இதே பேச்சாக இருந்தது.

