மதுரை: மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் புதல்வரைக் கடத்தி வைத்துக்கொண்டு ரூ. 20 லட்சம் கேட்ட ஒரு கும்பலைப் பிடிக்க போலிஸ் வீசிய வலையில் மூன்று பேர் சிக்கினர்.
அந்த மூவரையும் கைது செய்து போலிசார் போலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். போலிசிடம் சிக்கியவர்களில் பாலமுருகன், 22, என்பவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மாண்டுவிட்டார். இந்தச் செய்தி பரவியதை அடுத்து பாலமுருகனின் உறவினர்கள் அந்த மருத்துவமனைக்கு எதிரே குவிந்து போராட்டம் நடத்தினார்கள்.
விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலமுருகனை போலிசார் தாக்கி கொன்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அங்கு இருந்த பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் என்பவர் இதன் தொடர்பில் பல விவரங்களைத் தெரிவித்தார்.
"என் மகனை அவனியாபுரம் போலிசார் விசாரணைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் பிறகு அவனைப் பற்றிய தகவல் இல்லை.
"திடீரென மருத்துவமனையில் அவன் மாண்டுவிட்டதாக எங்களி டம் தெரிவித்தார்கள். விசாரணை என்ற பெயரில் போலிசார் சரமாரியாகத் தாக்கி என் மகனை கொன்றுவிட்டனர். சம்பந்தப்பட்ட போலிஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று முத்து கருப்பன் தெரிவித்தார்.
உறவினர்களின் திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனை முன்பு போலிசார் குவிக்கப்பட்டனர். பாலமுருகனின் உடல் பரிசோதிக்கப்பட்டு பிறகு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆள்கடத்தல் விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்திச் செல்லப்பட்ட பார்த்திபன் என்பவர் எம்பிஏ பட்டதாரி. இவரை சில நாட்களுக்கு முன் திடீரென ஒரு கும்பல் கடத்தியது.
ரூ. 20 லட்சம் கொடுத்தால் பார்த்திபன் உயிரோடு விடுவிக்கப்படுவார் என்று அவருடைய தந்தையிடம் யாரோ தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
அவர் உடனே அவனியாபுரம் போலிசில் புகார் தெரிவித்தார். போலிசார் தனிப்படை அமைத்து பாலமுருகன், சரவணன், முருகன் என்ற மூவரையும் கைதுசெய்தனர்.

