சசிகலா இல்லாத அதிமுக: புது தெம்புடன் வியூகம் வகுக்கிறது

சசிகலா இல்லாத அதிமுக: புது தெம்புடன் வியூகம் வகுக்கிறது

2 mins read

சென்னை: இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து பழனிசாமி-பன்னீர் தலைமையிலான அதிமுக புதிய தெம்பைப் பெற்று இருக்கிறது. சசிகலாவை அறவே ஒதுக்கிவிட்டு கட்சியைப் பலப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை ஒரு கை பார்த்துவிட அதிமுக அதிரடி வியூகம் வகுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவுக்கு அதிமுகவில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் தொடர்புகளை அறவே துண்டித்துவிட்டு கட்சியினரை ஐக்கியப்படுத்தி தேர்தலைச் சந்திக்க அதிமுகவின் இப்போதைய தலைவர்கள் திட்மிட்டு இருக்கிறார்கள் என்று அரசியலில் பேச்சு அடிபடுகிறது.

அதிமுகவின் தலைமைப் பொறுப்பை பழனிசாமி-பன்னீர் ஏற்றதை எதிர்த்து புதிய கட்சியைத் தொடங்கி அரசியல் நடத்தி வந்த அமமுக தினகரன் ஏறக்குறைய ஓய்ந்துவிட்டார் என்றும் அவருக்கு மக்கள் செல்வாக்கு அறவே இல்லை என்றும் முடிவுசெய்துள்ள அதிமுக தலைமைத்துவம், அவரிடம் எஞ்சியிருக்கும் ஒரு சிலரையும் இழுப்பதற்கு வலையை விரிக்கத் தொடங்கி இருக்கிறது.

தினகரனின் வலதுகரமாக இருந்து வந்த புகழேந்தி, அண்மையில் முதல்வரைச் சந்தித்ததை அடுத்து அமமுக பிரமுகர்கள் பலரும் தாங்களும் முதல்வரைச் சந்திக்க ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

"இப்போதைய அதிமுகவில் சசிகலா-தினகரன் சலசலப்பு ஏறக்குறைய அடங்கி ஒடுங்கிவிட்டது. சசிகலா தரப்பினரும் அதிமுகவுக்கு ஆதரவு தர தொடங்கிவிட்டார்கள். இதையே அண்மைய இடைத்தேர்தல் வெற்றிகளும் புலப்படுத்துகின்றன. இனிமேல் அதிமுகவுக்கு உள்ள சவால் திமுகதான்," என்று அரசியல் கவனிப்பாளர் ஒருவர் கூறினார்.

இந்தச் சவாலை சமாளிக்கும் வகையில் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியைப் பழைய நிலைக்குக் கொண்டு வர பழனிசாமி-பன்னீர் இருவரும் பல உத்திகளை வகுத்து இருப்பதாகவும் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

அந்த உத்திகளின் பலன்களை உள்ளாட்சித் தேர்தலில் காணமுடியும் என்றும் அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.