வேலூர்: வேலூரில் படம் பார்க்க வந்தவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்கு, தான் வசூலித்த கூடுதல் தொகையைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
திரையரங்குகள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று தமிழக அரசு அளவு நிர்ணயித்துள்ளது.
அதன்படி கட்டணம் ஏசி வசதிஉள்ள அரங்குகளில் ரூ.120. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ளவற்றில் ரூ.100. ஊராட்சிப் பகுதிகளில் ரூ.75 வசூலிக்கலாம். தீபாவளிப் பண்டிகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
ஆனால் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இயங்கிவரும் ஒரு திரையரங்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இராணிப்பேட்டை இணை ஆட்சியர் அங்கு திடீர் ஆய்வு நடத்தினார்.
அந்தத் திரையரங்கு கூடுதலாக வசூலித்து இருந்த ரூ.33,830 தொகையைத் திரைப்படம் பார்த்த 589 ரசிகர்களுக்குத் திரும்ப வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகை பார்வையாளர்களுக்குத் திருப்பித் தரப்பட்டது.
இதனை அறிந்து பெரிதும் மகிழ்ந்த ரசிகர்கள் படம் பார்த்த மகிழ்ச்சியோடு ஆட்சியரையும் பாராட்டிவிட்டுச் சென்றனர்.

