ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயதுச் சிறுவன் சுஜித் வில்சனை உயிருடன் மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலாமேரி தம்பதியின் மகன் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது ஆழ்துளைக் கிணற்றினுள் விழுந்துவிட்டான். அவனை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதை அடுத்து, சுஜித் இறந்தது உறுதிப் படுத்தப்பட்டது. அதிகாலை 2.30 மணி அளவில் சுஜித் இறந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதன்பின் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, அங்கிருந்து உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட, மருத்துவமனையில் இருந்தபடியே நேராக ஃபாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, சுஜித்துக்கு அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார், ஜோதிமணி எம்.பி. ஆகியோரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவனது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
சிறுவன் சுஜித்தின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
"இரவு பகலாக மீட்புப் பணிகளை மேற்கொண்டபோதும் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப் பட்டது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது," என்று முதல்வர் பழனிசாமி வருத்தப்பட்டார்.
பின்னர் நேற்று மாலையில் நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சுஜித்தின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அவனது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
அப்போது, சுஜித்தின் குடும்பத்திற்குத் தமிழக அரசின் சார்பில் பத்து லட்ச ரூபாயும் அதிமுக சார்பில் பத்து லட்ச ரூபாயும் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதனிடையே, சுஜித் தவறி விழுந்த ஆழ்துளைக் கிணறும் அவனை மீட்பதற்காக அருகில் தோண்டப்பட்ட குழிகளும் கான்கிரீட் கலவையால் மூடப்பட்டன.

