சுஜித் மீட்பு நேரலை ஒளிபரப்பில் பெற்றோர் கவனம்; நீரில் மூழ்கி மகள் மரணம்

சுஜித் மீட்பு நேரலை ஒளிபரப்பில் பெற்றோர் கவனம்; நீரில் மூழ்கி மகள் மரணம்

1 mins read

சிறுவன் சுஜித் வில்சன் மீட்புப் பணிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தம்பதி, கவனக்குறைவால் தங்களின் இரண்டு வயது மகளைப் பறிகொடுத்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது.

தூத்துக்குடியின் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் லிங்கேஸ்வரனுக்கும் நிஷா என்பவருக்கும் கடந்த மூன்றாண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு ரேவதி சஞ்சனா (படம்) என்ற இரண்டு வயது மகள் இருந்தாள்.

இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றினுள் தவறி விழுந்த குழந்தை சுஜித்தின் மீட்புப் பணிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாக, கணவனும் மனைவியும் அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதிலிருந்த கவனத்தில் மகளை அவர்கள் மறந்துவிட்டனர்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்பதைச் சிறிது நேரம் கழித்தே அவர்கள் உணர்ந்தனர். அக்கம்பக்கத்தில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் குளியலறையைத் திறந்துபார்த்த லிங்கேஸ்வரன், அங்கிருந்த பிளாஸ்டிக் நீர்த்தொட்டியில் சஞ்சனா தலைக்குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அசைவின்றி இருந்த சஞ்சனாவை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சஞ்சனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பில் போலிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சுஜித் மரணத்திற்காக தமிழகமே கண்ணீர்விட்டு வரும் நிலையில் குழந்தை சஞ்சனாவின் உயிரிழப்பு அந்தச் சோகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.