தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள `தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக் கடையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீப்பற்றியது. கடையின் மூன்றாவது மாடியில் கரும்புகை வெளியானதாகவும் தொடர்ந்து தீப்பற்றியதாகவும் கூறப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே இரண்டாவது, முதலாவது தளங்களுக்கும் தீ மளமளவெனப் பரவியது.
இதில் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததுடன், ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
கோவில்பட்டியில் கண்ணப்பன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் கிளை தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை உஸ்மான் சாலையில் செயல்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஈராண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்காக கேன்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டீசலில் தீப்பிடித்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனது. அதில், முக்கால்வாசி கட்டடம் இடிந்ததுடன், ரூ.300 கோடி மதிப்பிலான பொருள்களும் நாசமானதாகக் கூறப்பட்டது.

