சென்னை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகிழக்குப் பருவமழை மாநிலம் முழுவதும் பேய் மழையாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் மழை தொடரும் என்றும் குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அபாயச் சங்கு ஊதியுள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்து இருக்கிறது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு 'மகா' என்று பெயர் சூட்டப்படும் என்றும் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகமாக பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
16 மாவட்டங்களில் பேய் மழை தொடர்கிறது. ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், வேலூர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அவற்றில் அடங்கும்.
தேவைக்கேற்ப பள்ளிகளை மூடும்படி நிர்வாகங்களுக்கு ஆலோசனையும் கூறப்பட்டு உள்ளது.
தென் கர்நாடகாவிலும் பேய் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே விவசாயத்துக்கு திறந்துவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வேளையில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளோடு தயாராக இருக்கும்படி எல்லா மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் துறை அறிவித்து இருக்கிறது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 763 படகுகள் திரும்பிவிட்டதாகவும் இதர ஏழு படகுகளுடன் தொடர்புகொள்ள முயற்சிகள் நடப்பதாகவும் அந்தத் துறை அறிவித்து உள்ளது. அதேபோன்று தென் பகுதியில் ஆழ்கடலுக்குச் சென்ற 562 படகுகள் கரைக்குத் திரும்பிவிட்டன. எஞ்சிய மூன்று படகுகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறின.
மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநில கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அந்தத் துறையின் ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

