ஆழ்துளை: 15 ஆண்டில் 10 சிறார்கள் பலி

ஆழ்துளை: 15 ஆண்டில் 10 சிறார்கள் பலி

2 mins read
cf2118a1-1be5-4f12-9a5f-aecf9a175cba
-

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குறைந்தபட்சம் 10 சிறார்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மாண்ட சம்பவத்தை அடுத்து இந்த நிலவரம் அம்பலமானது.

கடந்த 15 ஆண்டுகளில் 13 சிறார்கள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டதாகவும் அவர்களில் மூன்று பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டதாகவும் ஒரு பேட்டியில் சமூகத் தொண்டரான எம் மணிகண்டன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இதர பல மாநிலங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் 2010ல் சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. இருந்தாலும் நாட்டில் அந்த நெறிமுறைகள் முற்றிலும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

விவசாயத்திற்கும் இதர நோக்கங்களுக்காகவும் துரப்பணங்கள் மூலம் பூமிக்குக் கீழே சில இடங்களில் 1,000 அடி வரைகூட கிணறு துளைக்கப்படுகிறது.

நீர்வளம் இல்லை என்றதும் கிணறுயின் வாயை மூடாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

மழை பெய்து மண் கரைத்துக் கொண்டு அந்தக் கிணறுயின் வாய்ப் பகுதி அகலமாகிவிடுவதால் சிறார்கள் அதில் விழுந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று வேறு ஒரு வல்லுநர் குறிப்பிட்டார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடும் சிறார்களை மீட்பதற்கு பொதுவாக தமிழ்நாட்டில் போதிய அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்தார்கள். ஐஐடி சென்னை கல்வி நிறுவனம் உருவாக்கி இருக்கும் மனித இயந்திரம் கூட மணப்பாறை சம்பவத்தில் கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு தமிழ்நாட்டில் இத்தகைய சம்பவங்களை வெற்றி கரமாகக் கையாளும் அளவுக்கு அறிவியல்பூர்வமாகத் தீர்வு இல்லை என்றும் மனிதர்களும் இந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவற்றை எல்லாம்கொண்டு சில நேரங்களில் வெற்றியைச் சாதிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய வல்லுநர்களில் ஒரு வரான மணிகண்டன் உருவாக்கிய இயந்திரமும் மணப்பாறை சம்பவத்தில் பயன்படுத்தி பார்க்கப்பட்டது.

இவர் சங்கரன்கோவில் ஆழ்குழியில் சிக்கிய ஒரு குழந்தையைத் தன் கண்டுபிடிப்பு மூலம் மீட்டு இருக்கிறார். என்றாலும் நடுகாட்டுப்பட்டியில் இவரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.

இதுபற்றி கருத்துரைத்த மணிகண்டன், தன்னுடைய மனித இயந்திரத்தின் சுற்றளவு 8 அங்குலம் என்றும் ஆனால் ஆழ்துளைக் கிணற்றின் அங்குலம் 4 என்றும் ஆகையால் தன் சாதனம் கிணற்றின்உள்ளே செல்ல முடியவில்லை என்றும் விளக்கினார்.

தனது சாதனத்தைத் திருத்தி அமைத்து முயற்சித்தபோதும் பலனில்லை என்றாரவர்.

இதனிடையே, சிறுவன் சுர்ஜித்தின் உடல் வெளியில் ஏன் காட்டப்படவில்லை என்பது பற்றி வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கினார்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப உடலை தாங்கள் வெளியே காட்டவில்லை என்றும் என்றாலும் சடலம் எப்படி இருந்தது என்பது பற்றி பெற்றோரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், நடுகாட்டுப்பட்டி சம்பவம் பற்றி விசாரணை நடத்து வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை தமிழக போலிஸ் மறுத்து இருக்கிறது.