சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இன்று 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு, நவம்பர் 1ஆம் தேதி 'தமிழ்நாடு நாள் விழா' என்று பிரகடனப்படுத்தி உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய, 'மெட்ராஸ் ராஜஸ்தானி' என்ற சென்னை மாகாணம் இருந்தது.
அரசியல் கட்சித் தலைவர்கள், மொழிப் போராட்ட தியாகிகள் ஆகியோரின் கோரிக்கைகளின்படி, 1956 நவம்பர் 1ல், சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து தனியாக மொழிவாரி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.
அந்த நாளை 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அரசாணை ஒரு வாரத்துக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று, 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாள் விழாவில், தமிழகம் மற்றும் தமிழின் தொன்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

