நாகூரில் வேவுத்துறை திடீர் சோதனை; ஒருவர் கைது

நாகூரில் வேவுத்துறை திடீர் சோதனை; ஒருவர் கைது

2 mins read
add91877-30b0-4410-8262-c3c3d34a5cd9
-

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அஜ்மல் என்பவர் வீட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அஜ்மல் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அஜ்மல் கைதானதாகவும் அவரிடம் விசாரணை நடப்பதாகவும் நேற்று தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

அதேபோல, கோவையில் இரண்டு இடங்களிலும் இளையான்குடி, திருச்சி, காயல்பட்டிணம் பகுதிகளிலும் வேவுத்துறை அதிகாரிகள் திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் லாரிப்பேட்டையில் சவுரிதீன் என்பவர் வீட்டிலும் ஜி.எம். நகரில் நிஷார் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் ஐந்து பேர் சோதனை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த நூர் முகமது என்பவரது புதல்வரான சிராஜூதீன், 20, என்பவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொலைபேசி மூலம் பேசியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அவரின் வீட்டில் சோதனை நடந்ததாகத் தெரியவந்தது.

கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்கத் தலைவர்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

கடந்த ஜூன் மாதம் முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா ஆகிய இருவர் கைதாயினர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சோதனை நடந்தது.

இதனை அடுத்து நேற்று சோதனைகள் தொடர்ந்தன. அதில் மிக முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தமிழ்நாட்டின் ஊடகத் தகவல்கள் தெரிவித்து இருக்கின்றன.