சென்னை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருவதன் காரணமாக தங்கள் உறவினர் இறந்துவிட்டார் என்று கூறி நள்ளிரவில் சென்னை கீழ்ப்பாக்க மருத்துவமனையில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைந்தகரையில் வசித்து வரும் ஷிபானா என்ற மாதுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அவரை உறவினர்கள் உடனடியாக கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் ஷிபானா வயிற்றுவலியால் துடித்த போதிலும் அவருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஷிபானா உயிர் இழந்துவிட்டார். இதை அறிந்ததும் கொதித்துப்போன உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மருத்துவமனையில் ஷிபானா வயிற்றுவலியால் துடிதுடித்ததைக் கண்டு தாங்க முடியாமல் அவருடைய கணவரான சலீம் என்பவ ரும் உறவினர்களும் அந்த மருத்துவமனை மருத்துவர்களை அணுகி உதவி கேட்டபோது, அவர்கள் தாதியரை அணுகி நோயாளிக்கு ஊசி போட்டுக்கொள்ளும்படி அலட்சியமாகக் கூறிவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அந்த மருத்துவமனையில் 2,000 நோயாளிகளுக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் சிகிச்சை அளிப்பதாகவும் இதனால் அங்கு பலரும் படாதபாடு படுகிறார்கள் என்றும் அந்த உறவினர்கள் கவலை தெரிவித்தனர். ஷிபானா-சலீம் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் நடத்துகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அளவுக்கு மருத்துவர்கள் இல்லை என்றும் மருத்து வர்கள் குறைகூறி வருகிறார்கள்.

