தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தமிழக அரசு மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிடில் அவர்களது இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு, பணியிட மாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உடன் அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், "அரசுக்கு நெருக்கடி தரவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அங்கீகரிக்கப்படாத அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது," என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூட்டமைப்பில் இடம்பெற்ற தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தை விலக்கிக்கொண்டு பணிக்குத் திரும்பிவிட்டனர்.
மற்ற அனைவரும் இன்று காலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கெடு விதித்துள்ளார்.
"தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று இன்று (நேற்று) மாலை வரை 2,160 மருத்துவர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் 15,000 பேர் போராடி வருகின்றனர்.
"அவர்கள் அனைவரும் நாளை (இன்று) காலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் தமிழக அரசு காலக்கெடு விதிக்கிறது. அவ்வாறு திரும்பாவிடில் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்களை நியமிக்கும் பணி தொடங்கும்," என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ரூ.1.24 கோடியைச் செலவிட்டே ஒரு மருத்துவரை உருவாக்குவதாகக் கூறிய அவர், மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார்.

